இயல்-1
துணைப்பாடம்
உரைநடையின் அணிநலன்கள்
குறிப்புச்சட்டகம்:-
*முன்னுரை
*இருவேறு மனிதர்கள் சந்திப்பு
*அன்றும் இன்றும்:
*உரைநடையில் உத்தி அழகு:
*இணைஒப்பு அழகு.
*இலக்கணை
*மோனையும் எதுகையும்
*எதிரிணை இசைவு
*உச்சநிலை
* முடிவுரை
Cecilia's space
முன்னுரை:
சங்கத் தமிழனும் இன்றைய இணையத் தமிழனும் சந்தித்துக் கொண்டால் என்ன பேசிக்கொள்வார்கள்? அதிலும் அவர்களின் பேச்சு இலக்கியம் பற்றியதாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதின் எழுத்து வடிவம்தான் இக்கட்டுரை டாக்டர். எழில்முதல்வன் எழுதிய புதிய உரைநடை என்ற நூலினைத் தழுவி இக்கட்டுரை அமைந்துள்ளது.
இருவேறு மனிதர்கள் சந்திப்பு:
சங்கப் புலவர் ஒருவர் இயற்கை சூழ்ந்தஇடமொன்றில் ஓலைச்சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார் அவர் முன் சிறிய கால இயந்திரம் ஒன்று தோன்றுகிறது. அதிலிருந்து இன்றைய இணையத் தமிழர் ஒருவர் வெளியே வருகிறார். உங்களுடன் ஒருமணி நேரம் மட்டுமே இருக்கமுடியும் அதற்குள் இலக்கியம் குறித்துப் பேச வேண்டும் என்கிறார் .சங்ககாலம் தொடங்கி இன்றுவரை உள்ள இலக்கியம் குறித்து இருவரும் உரையாடத் தொடங்கினர்.
அன்றும் இன்றும்:
”சங்ககாலத்திற்குப் பின் தமிழ் இலக்கியம் அற இலக்கியமாக-காப்பியமாக –சிற்றிலக்கியமாக –சந்தக்கவிதையாக- புதுக்கவிதையாக மாறி வந்திருக்கின்றன. உரைநடையின் வளர்ச்சியோ அளவற்றது. சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என தற்காலத்தில் வளர்ந்துள்ளது.” என்றார் இணையத்தமிழர்.
நாங்கள் கவிதைகளில் பயன்படுத்திய உத்தி அழகுகளை எல்லாம் உரைநடையில் பயன்படுத்துவீர்களா? என்று சங்கத்தமிழர் கேட்டார்.
உரைநடையில் உத்தி அழகு:
திருப்பரங்குன்றத்தின் அழகைப் இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக் கண்ணாடிகளைப் போன்று வட புறமும் தென் புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள் “என்று குறிஞ்சிமலர் நாவலில் நா.பார்த்தசாரதி உவமையைப் பயன்படுத்தி உள்ளார். “முக நிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன” என்று உரைநடையில் உருவகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவையெல்லாம் உரைநடையில் உள்ள உத்தி அழகுகள் ஆகும்.
இணை ஒப்பு அழகு:
உவமைக்கும் பொருளுக்கும் இடையே உவமை உருபு இல்லாதது எடுத்துக்காட்டு உவமையணி ஆகும். இதை உரைநடையில் பயன்படுத்தும் போது இணை ஒப்பு என்பர்.
”ஊர்கூடிச்செக்குத்தள்ளமுடியுமா? என்கின்றனர். ஊர்கூடின பிறகுதான் செக்கு தள்ள வேண்டும் என்று காத்திருப்பவர்களின் காரியம் கைகூடாது. புரோகிதருக்காக அம்மாவாசை காத்திருப்பதில்லை “
வ.ரா –வின் இந்த வரிகள் இணைஒப்பு அழகுக்குச் சிறந்த சான்றாகும்.
இலக்கணை:
கேட்காத பொருளைக் கேட்பன போலவும் பேசாத பொருளைப் பேசுவன போலவும் கூறுவது செய்யுள் மரபாகும். உரைநடையில் இம்மரபு பின்பற்றப்பட்டால் இலக்கணை எனப்படும் .தமிழ்த்தென்றல்திரு.வி,க-அவர்களின் உரைநடைப் பகுதி ஒன்று இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.” சோலையில்புகுவேன் மரங்கள் கூப்பிடும். விருந்து வைக்கும். ஆலமர நிழலில் அமர்வேன். 'ஆல்' என் விழுதைப் பார். அந்த அரசுக்கு இது உண்டா என்று கேட்கும்” இந்த உரைநடை இலக்கணைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
Cecilia's space
மோனையும் எதுகையும்:
மோனையும் எதுகையும் செய்யுளில் வரும்போது அழகு. அதை நீங்கள் உரைநடையில் பயன்படுத்துவீர்களா? என்று சங்கப்புலவர் கேட்டார். அதற்குச் சொல்லின் செல்வரின் உரைநடை அழகை இணையத் தமிழன் எடுத்துக் காட்டினார். தென்றல் அசைந்து வரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம் மலைவளம் படைத்த பழம்பதியாகும் . அம்மலையில் கோங்கும் வேங்கையும் ஓங்கிவளரும். குரவமும் முல்லையும் நறுமணங் கமழும். கோலமயில் தோகை விரித்தாடும்.
எதிரிணைஇசைவு:
எதிரும் புதிருமான முரண்படும் கருத்துகளை அமைத்து எழுதுவது எதிரிணை இசைவு ஆகும்.”குடிசைகள் ஒருபக்கம்;கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒரு பக்கம் புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக்கூடுகள் ஒருபக்கம்; பருத்த தொந்திகள் மறுபக்கம்” என்று தோழர் ப.ஜீவானந்தம் எழுதியிருப்பது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
உச்சநிலை :
சொல்லையோ கருத்தையோ அடுத்தடுத்து வைக்கும் முறையின் சிறப்பு உச்சநிலை ஆகும்.
“இந்தியாதான் என்னுடைய மோட்சம்; இந்தியாவின் நன்மைதான் என் நன்மை. இந்தியாதான் என் இளமையின் மெத்தை; இந்தியாதான் என் இளமையின் நந்தவனம்; இந்தியாதான் என் கிழக்காலத்தின் காசி” -- பாரதியின் இந்தவரிகள் உச்சநிலைக்குச் சிறந்த உதாரணம்ஆகும்.
முடிவுரை:
” என்றும் உள தென்தமிழ் ” என்றார் கம்பர். தமிழ் எத்திசையும் புகழ்மணக்க இருப்பதற்குக் காரணம் காலந்தோறும் தமிழ் தமிழர்களால் வளர்க்கப்பட்டு வந்ததே ஆகும்.தமிழ்த்தாய்க்குக் காலந்தோறும் அறிஞர்கள் பலர் பல்வேறு அணிகலன்களை அணிவித்து அழகு சேர்த்துள்ளனர் என்பதை கட்டுரை வழி அறிகிறோம்.
********
Prepared by,
M.Cecilia Sagayam. M.A., M.Phil., B.Ed.
Chennai Public School, Thirumazhisai.
Tamil department HOD.